கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு நீரேற்று நிலையத்தில் இருந்து கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கம்பாலப்பட்டி, பில் சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், எஸ்.நல்லுர், ஜல்லிப்பட்டி மற்றும் கோட்டூர், சமத்தூர் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் சரிவர வழங்குவதில்லை என்றும், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து நேற்று ஆழியாறு நீரேற்று நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறுகையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பவம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 25-ந்தேதி தான் சம்பளம் கொடுக்கின்றனர். அரசு ஒதுக்கீடு செய்த சம்பளம் ரூ.13 ஆயிரத்தை வழங்காமல், ரூ.7500 வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீரேற்று நிலையத்தில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் உள்ளன. இருப்பினும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிக்கு பணியாற்றி வருகிறோம். எனவே எங்களுக்கு மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மேலும் தீபாவளி போனஸ் மற்றும் நீரேற்று நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உள்ளோம். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.