கனகராஜின் அண்ணன் தனபால்கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


கனகராஜின் அண்ணன் தனபால்கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 18 Aug 2023 3:45 AM IST (Updated: 18 Aug 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கனகராஜ் அண்ணன்

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

மேலும் இந்த வழக்கில் சல தடயங்களை அழித்ததாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

திடீர் நெஞ்சுவலி

இதற்கிடையே நிலமோசடி தொடர்பாக மேச்சேரி போலீசார் தனபாலை கடந்த மாதம் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனபாலுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அவர் மறுத்ததுடன், தனக்கு விரைவில் ஜாமீன் கிடைத்து விடும் என்பதால் வெளியே சென்றபிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதாக கூறியதை தொடர்ந்து அவர் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த நிலையில் தனபாலுக்கு நேற்று முன்தினம் மீண்டும் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கட்டாயம் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஆஞ்சியோ செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story