பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீனில் விடுதலை
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனல் கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் தனது டுவிட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம்பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 10-ந் தேதி நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணனை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கனல் கண்ணனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் அவரை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து அமைப்பினர் மலர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பின்னர் கனல் கண்ணன் கூறுகையில், "இந்து முன்னணி கலை பண்பாட்டு பிரிவை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தமிழகத்தின் பண்பாடு கெட்டு விடக்கூடாது என்ற காரணத்தால், டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்தேன். அதை தி.மு.க.வினர் மிகப்பெரிய ஹிட்டாக்கி விட்டனர். நான் அந்த வீடியோ பதிவு செய்யும்போது 5 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்தனர். எனது கைதுக்கு பின்னர் 2 மில்லியன் நபர்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இந்த வெற்றிக்கு திராவிட கட்சி அரசியல் தான் காரணம்" என்றார்.