காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தவாரி திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது.
காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி திருவிழா
விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.