காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் - ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து, காலை, மாலை என இரு வேளைகளில் வரதராஜ பெருமாள் சிம்ம வாகனம், அம்சவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பாதம் தங்கிகள் எனும் கோடிகார தொழிலாளர்கள் தூக்கி செல்ல நாள்தோறும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார்.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான இன்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 73 அடி உயரமுள்ள 7 நிலை கொண்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த தேரோட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மக்கள் கடலாகக் காட்சி அளிக்கிறது.