கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தைகிராமமக்கள் முற்றுகை


கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தைகிராமமக்கள் முற்றுகை
x

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிக்கு பட்டா

கந்தர்வகோட்டை அருகே கொத்தகம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தந்தையுடன் வாழும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தான் பஸ் நிறுத்தத்திற்காக அமைக்கப்பட்ட இடத்தில் குடியிருந்து வருகிறேன். எனவே ஆதரவற்ற எனக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த கந்தர்வகோட்டை தாலுகா நிர்வாகம் அவருக்கு கொத்தகம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்க முன்னேற்பாடுகள் செய்தனர்.

முற்றுகைபோராட்டம்

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் தங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர்களுக்கு மேல் வசிப்பதாகவும், இவர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளாக இருப்பதாலும் அந்த கிராமத்திலேயே பல குடும்பங்களுக்கு பட்டா இடங்கள் இல்லாத போது வெளி நபர் ஒருவருக்கு தங்கள் கிராமத்தில் பட்டா வழங்க கூடாது.

மேலும் எங்கள் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அந்த இடம் பொது வினியோக கட்டிடம், மகளிர் குழு கட்டிடம், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் போன்ற எங்களது கிராமத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறினர்.

அதிகாரிகள் உறுதி

இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்ட வழங்கல் அதிகாரி உத்திராபதி, வருவாய் ஆய்வாளர் சேகர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்டின்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இதுகுறித்து தாசில்தாரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில், கிராமமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கலைந்து சென்றனர்.

தாசில்தார் அலுவலகத்தில் அதிகாலையில் நுழைவு வாயிலில் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலக பணியாளர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் சாலையிலேயே காத்திருந்தனர்.


Next Story