பாபநாசம் வன சோதனை சாவடியில் காணி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
பாபநாசம் வன சோதனை சாவடியில் காணி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரமசிங்கபுரம்:
அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபநாசம் வன சோதனை சாவடி முன்பு காரையாறு, சேர்வலாறு, லோயர்கேம்ப் பகுதிகளை சேர்ந்த காணி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், அரிசியை விரும்பி சாப்பிடும் இந்த யானை மீண்டும் அதே உணவை தேடி மாஞ்சோலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் தற்போது மயக்க நிலையில் இருக்கும் இந்த யானை எப்ேபாதாவது காரையாறு பகுதியை வந்தடையும் என்ற அச்சமும் உள்ளது. இதனால் காரையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த யானையால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டால் அதற்கு வனத்துறையினரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்' என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணி இன பழங்குடியின சமுதாய நிர்வாகி ஆறுமுகம் காணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மணி மற்றும் அரசியல் கட்சியினர், காரையாறு, சேர்வலாறு காணி இன மக்கள் பலர் கலந்து கொண்டனர்.