இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம்


இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம்
x

இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் கொடியேற்று விழா, பல்லக்கு உற்சவம், வாணவேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து காணியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மீது உப்பு, மிளகு, முத்து கொட்டைகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

தேரோட்டத்தையொட்டி, அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, அ.பள்ளிப்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. மேலும் அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தேர்த்திருவிழாவுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இருளப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஊர்த்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் இந்த தேர்திருவிழாவில் பங்கேற்றனர். தேரோட்டத்தை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முனி பிடிக்கும் திருவிழாவும், காணியம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும்நடக்கிறது.

முன்னதாக நடந்த தேரோட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்க தலைவர் நல்லத்தம்பி, இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மணிகண்டன், செயல் அலுவலர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story