கனியாமூர் கலவரம்: மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பேட்டி


கனியாமூர் கலவரம்:  மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு  பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பேட்டி
x

கனியாமூர் கலவரத்தின் போது தீ வைக்கப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து பள்ளிக்கு தேதி குறிப்பிடாமல் நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு முன்னெடுத்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. அதோடு, வகுப்பறைகள் மற்றும் கல்வி உபகரணங்கள், மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள், பள்ளி பதிவேடுகள் போன்றவற்றையும் கலவரக்காரகள் தீ வைத்து கொளுத்தினர்.

மாணவர்களின் கல்வி பாதிப்பு

இதனால், இந்த பள்ளியில் படித்து வந்த சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படிப்பு தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும், பெற்றோர்கள் பலரும், தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளாதாக, பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களிடம் ஏற்கனவே முறையிட்டனர்.

இந்த நிலையில், பள்ளியில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இத்தகைய சூழலில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று மாலை சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

அப்போது, வகுப்பறைகள், அலுவலகம் ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து சரி செய்வது, இதற்கு எத்தனை நாட்கள் ஆகும், மாணவர்களின் கல்வி நலனை கருதி விரைவில் வகுப்புகள் தொடங்குவது, இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்புவது போன்ற பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், தாசில்தார் விஜய பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பள்ளியை திறக்க நடவடிக்கை

ஆய்வு முடிவில் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ ப்போது அவர் கூறியதாவது:-

இந்த பள்ளியை உடனடியாக திறப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் விசாரணையும் சென்று கொண்டுள்ளது, அதே நேரத்தில் பள்ளியை மீட்கவும் முயற்சித்து வருகிறோம். நாங்கள் அனைத்துக்கும் முழுஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீயில் எரிக்கப்பட்டுவிட்டது, அதற்கான மாற்று நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்ட போது, இந்த பள்ளியில் படித்த மாணவர்களின் முழுவிவரமும் ஆன்லைனில் உள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு முகாம் ஒன்றை நடத்தி, சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுப்போம். சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளியின் அதிகாரப்பூர்வ பட்டியல் எங்களிடம் இருந்ததால், சான்றிதழ்கள் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார் அவர்.

1 More update

Next Story