சரக்கு வேனில் கடத்திய 1000 கிலோ கஞ்சா பிடிபட்டது
சரக்கு வேனில் கடத்திய1000 கிலோ கஞ்சா பிடிபட்டது.
மதுரை மண்டல வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினர் மதுரை ரிங்ரோடு வண்டியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்றை அவர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. அதைத்தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் மினி வேனை 5 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று ஒத்தக்கடை பகுதியில் பிடித்தனர். பின்னர் அந்த வேனை சோதனை செய்தபோது நெல், தவிடில் மறைத்து சுமார் 1000 கிலோ கஞ்சா மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த சரக்கு வேனை கஞ்சாவுடன் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், அந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் டிரைவரை கைது செய்து ஆயிரம் கிலோ கஞ்சாவுடன் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.