முட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல்
முட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொண்டி,
தொண்டி அருகே அய்யனாரேந்தல் ஊருணி பகுதியில் முட்புதருக்குள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், திருவாடானை மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, புல்லூர் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், எம்.ஆர்.பட்டினம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் தொண்டி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் அங்கு இருந்த 146 கிலோ எடை உள்ள 73 கஞ்சா பொட்டலங்களை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.