ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் -தம்பதி கைது


ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் -தம்பதி கைது
x

ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநில தம்பதியிடம் இருந்து திருப்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

திருப்பூர்

ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநில தம்பதியிடம் இருந்து திருப்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை உட்கோட்ட ரெயில்வே போலீஸ் தனிப்படையினர் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை எண்.1-ல் ஆய்வு செய்தனர். அப்போது விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

ரெயிலில் இருந்து இறங்கி வந்த வடமாநில தம்பதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். அதற்குள் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

தம்பதி கைது

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுமந்த்குமார் சர்ச்சி (வயது 27), அவருடைய மனைவி சுபத்ராதேவி (26) என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், சொந்த ஊரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, வெகுமதி வழங்கி பாராட்டினார். வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா, விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பதை தனிப்படையினர், போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் படை மூலம் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story