காணும் பொங்கல் கொண்டாட்டம்: மாமல்லபுரத்தில் 1 லட்சம் பேர் திரண்டனர்
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தடையை மீறி ஏராளமானவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டது. சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கட்டுச் சோற்றை கட்டிக்கொண்டு வந்து இருந்தனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். 10 வயது முதல் 60 வயதை தாண்டியவர்களும் கடற்கரை மணலில் உற்சாகமாக நடந்து சென்று பொழுதை கழித்தனர்.
கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்திருந்தனர். கடற்கரையில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை போலீசார் கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்து கொண்டிருந்தனர்.
ஆனால் எச்சரிக்கையை மீறி ஒரு சிலர் கடலில் குளித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தற்காப்புக்காக படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்கள் கடற்கரையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து மாமல்லபுரம் நகருக்குள் வர 10 ரூபாய் கட்டணத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று மாமல்லபுரத்துக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காணும் பொங்கலை கொண்டாட திரண்டிருந்தனர்.
மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.