அலையின்றி குளம் போல் மாறிய கன்னியாகுமரி கடல்


அலையின்றி குளம் போல் மாறிய கன்னியாகுமரி கடல்
x

கன்னியாகுமரியில் அலையின்றி குளம் போல் மாறிய கடலால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் அலையின்றி குளம் போல் மாறிய கடலால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

கன்னியாகுமரி கடல்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதுவும் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும். இதுபோக கடல் நீர் திடீரென உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடலின் நிறம் மாறுவது போன்ற நிலையையும் காண முடிகிறது.

அலையின்றி குளமாக மாறியது

இதற்கிடையே தமிழகத்தில் புதிதாக புயல் உருவாகி வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரி கடலில் அலையை காண முடியவில்லை. குளம் போல் மிகவும் சாந்தமாக காணப்பட்டது.

இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். எனினும் சில அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடலில் அச்சமின்றி குளித்ததையும் காண முடிந்தது. மாலை 3 மணி வரை கடலில் அலையின்றி காணப்பட்டதாகவும், அதன்பிறகு மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக படகு சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணியில் இருந்து வழக்கம் போல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. அச்சத்துக்கு இடையேயும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர்.


Next Story