கர்ண புறா பந்தயம்
கர்ண புறா பந்தயம் நடந்தது.
ஸ்ரீரங்கம்:
திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை கர்ண புறா பந்தயம் தொடங்கியது. இந்த பந்தயத்தில் 2 கர்ண புறா, 2 சாதா புறா கூட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் மலைக்கோட்டை, எடத்தெரு, மகாலெட்சுமிநகர், உறையூர், சோளம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் கர்ண புறா விடும் போட்டி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சாதா புறா விடும் போட்டி வருகிற 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பந்தயத்தில் பறக்கவிடப்படும் புறாக்கள் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரத்திற்கு குறையாமல் பறக்க வேண்டும். புறாவிடும் நபர்கள் தங்களது புறாக்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு நியமிக்கப்பட்ட நடுவரிடம் காட்ட வேண்டும். புறா மிகவும் தாழ்வாக சந்தேகப்படும்படி பறந்தால், அரை மணி நேரத்திற்குள் புறாவை கேட்பதற்கு நடுவருக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு புறாக்களுக்கும் அடையாள முத்திரை வைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் பாபாபாலாஜி செய்திருந்தார்.