கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?பொதுமக்கள் கருத்து


கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 14 May 2023 6:45 PM GMT (Updated: 14 May 2023 6:45 PM GMT)

கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

'அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன. கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். முடிவில் காங்கிரஸ் 136 இடங்களும், பா.ஜ.க. 65 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.

வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜ.க. ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத பொதுமக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

மக்கள் மனநிலை

மத்திய ஜவுளித்துறையின் ஓய்வுபெற்ற அரசு செயலாளரும், தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம் கூறும்போது, 'கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் நல்ல ஆட்சியை அவர்கள் அளித்தால், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை அவர்கள் பெற முடியும். ஒரே ஆண்டில் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இல்லை. காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இடையே ஒரு உற்சாகத்தை ஏறபடுத்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தும் இது இருக்கிறது' என்றார்.

சங்கநாதம் ஒலித்துள்ளது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான இரா.கிறிஸ்துதாஸ் காந்தி கூறும்போது, 'கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பது தனிநாயகமாக மாறி வருகிறது. ஆகவே இந்திய நாட்டில் யார் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் ஒரு 10 ஆண்டுகள் சுழற்சியில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் ஊறித்திழைத்த அரசியல்வாதிகளும், அவர்களது அரசு நிர்வாகத்தினரும் ஜனநாயத்தை சர்வாதிகார முறையில் மாற்றிக்கொண்டு விடுவார்கள். ஆகவே கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் ஆட்சி முறையை யாரும் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, வடநாட்டினரின் சிந்தனையின் தொகுப்பாக அமைந்து வருகிறது. தென்னிந்திய அரசியலில் வடமாநிலங்களைவிட சற்று ஆறுதலான வகையில் ஜனநாயக பாங்கும், மதச்சார்பின்மையும், நாட்டு ஒற்றுமை உணர்வுகளும், கல்வி, பொருளாதார வளர்ச்சிகளும் சிறப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த நல்ல அரசியல் போக்கு, இந்திய அளவில் எதிரொலிப்பதற்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு சங்கநாதமாக ஒலித்து உள்ளது. கர்நாடகவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது' என்றார்.

வாய்ப்பில்லை

ஐகோர்ட்டு முதுநிலை வக்கீல் கே.ஆர்.தமிழ்மணி கூறும்போது, 'கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. கர்நாடக மாநில தேர்தலில் குமாரசாமியின் ஆதிக்கம் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு கொடுத்து உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டது தான். அதனால் இது இரு தேசிய கட்சிகளின் நேரடி தேர்தல் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில தேர்தல்களில் பல உள்ளூர் பிரச்சினைகள் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே ஏற்படுத்தக்கூடியது. வாக்காளர்களின் எண்ணங்களை மாற்றும். இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உண்டு. இது நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் வெற்றியை தேடி தராது. முதன்மையான காரணம் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இன்னும் தங்களை தேர்தலுக்கு தயார்படுத்தி கொள்ளவில்லை. ஒரு சுறுசுறுப்பான ஊக்குவிக்கும் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஒரு இளம் தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும். திரும்ப, திரும்ப காங்கிரஸ் கட்சி சொல்லிய போதும் இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அகில இந்திய தலைவர் 80 வயதை கடந்தவர். அவரால் ஒரு தேர்தல் யுத்தத்தை பா.ஜ.க.விற்கு எதிராக நடத்த இயலாது' என்றார்.

கோபத்துக்கு உள்ளானார்கள்

விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ்:-

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த தேர்தல் முடிவை வரவேற்கிறேன். பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த, மக்களுக்கு எதிரான செயல்களும், ஊழல்களும்தான் முக்கிய காரணம். மேலும் அம்மாநில கல்வி அமைச்சரின் அடாவடி செயலான, பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் உடை அணிவதில் கொண்டுவந்த சட்டம் இஸ்லாமியர்களை கோபத்திற்கு உள்ளாக்கி பா.ஜ.க.விற்கு எதிராக திருப்பியுள்ளது. அதன் விளைவே தேர்தல் தோல்வி.

இந்த நிலை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், மாநிலங்களில் செல்வாக்கு உள்ள கட்சிகள், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதைவிட பிரதமர் பதவி மீதே குறியாக இருக்கிறார்கள்.

எனவே அனைத்து எதிர்க்கட்சிகளும் உடனடியாக பொது வேலை திட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே நோக்கமாக இருக்க ஒன்று சேர வேண்டும். இந்த முயற்சி மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும், அவர்கள் வீழ்த்தப்பட வேண்டும்.

கியாஸ் சிலிண்டர் மானியம்

மேல்மலையனூர் ராமமூர்த்தி:-

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு முக்கிய காரணம் அங்கு நிலவி வந்த பிரச்சினைகள். இந்த வெற்றி வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது, தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிலிண்டர் மானியம் தரப்படவில்லை என்ற மக்களின் அதிருப்தியால் பா.ஜ.க. தோற்றிருக்கலாம். மேலும் காங்கிரசின் இலவச பஸ் பயண சலுகை, மாணவர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ஆகியவை வழங்கப்படும் என்ற வாக்குறுதியினால் மக்கள் காங்கிரசை வெற்றி பெறச்செய்திருக்கலாம். எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வெற்றியை தீர்மானிக்கிறது என்பது இந்த மாநில வெற்றியை பொறுத்தே தெரிந்துகொள்ளலாம்.

மக்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம்

செஞ்சி பூமிநாதன்:-

கர்நாடகாவில் பிரதமர் மோடி, ஒரே நாளில் 14 இடங்களில் ரோட் ஷோ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஒன்றும் பலன் இல்லாமல் போய்விட்டது. மத வேறுபாடு அரசியல்தான் பா.ஜ.க.வின் தோல்விக்கு முழு காரணம். காங்கிரசின் இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளிடையே ஒரு புது தெம்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.

திண்டிவனம் விவசாயி விஷ்ணு:-

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை சாதாரணமாக எண்ணி விட முடியாது. ஏனெனில் அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க. தனது பலம் முழுவதை செலுத்தியும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. காங்கிரசுக்கு இந்த வெற்றி தொடரும் என்பதில் ஐயமில்லை. முன்பு போன்று நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சர்வ சாதாரணமாக வெற்றி பெற முடியாது.

பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும் சென்றடையும் வகையில் முக்கியத்துவம் அளித்தால் தான பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு வழிவகுக்கும்.

பா.ஜ.க.மீது மக்கள் அதிருப்தி

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம்:-கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க.ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம் ஆகும். மேலும் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரு காரணமாகும். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வு காரணமாக மக்கள் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும். இதன் மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமாக அமையும்.

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

தியாகதுருகத்தை சேர்ந்த நாகராஜன்:-

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டனி அமைக்கிறதோ அந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை மாநிலத்தில் யார் ஆட்சி அமைய வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அரசியல்வாதிகளின் எண்ணம் இனி எடுபடாது.


Next Story