கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது


கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது
x
தினத்தந்தி 8 Oct 2023 9:00 PM GMT (Updated: 8 Oct 2023 9:00 PM GMT)

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேல் அனையட்டி கிராமத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது ராஜ்யசபா உறுப்பினர் நிதியின் கீழ் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சமுதாயக் கூடத்தை ஜி.கே.வாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நீலகிரியில் படுகர் சமுதாய மக்கள் வளர்ச்சி அடையாமல் உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்க வேண்டும். தமிழக மக்கள் நினைக்கும் வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும். அதில் முக்கிய கட்சியாக த.மா.கா. இருக்கும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமின்றி செயல்படுகிறது. கர்நாடக அரசு நடுநிலைமையுடன் செயல்பட்டு காவிரி நதி நீர் ஆணையம் நிர்ணயிக்கும் அளவு தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசு நேரடியாக பேசி சுமுகமான முடிவை எட்ட வேண்டும். தமிழக அரசு சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு ஒரு சதவீத கூடுதல் அபராத தொகையை அறிவித்தது மக்கள் மீது சுமையை அதிகரிக்கும். இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவருக்கு காமராஜ் சதுக்கத்தில் படுகர் பாரம்பரிய முறைப்படி உடையணிவித்து, நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் மனோஜ் காணி, நிர்வாகி பெள்ளன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story