காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தவேண்டும் -ராமதாஸ் அறிக்கை


காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தவேண்டும் -ராமதாஸ் அறிக்கை
x

மேட்டூர் அணை காய்வதற்குள் காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தவேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த 3 வாரங்களுக்கு விடுவதற்கு தேவையான தண்ணீர்கூட மேட்டூர் அணையில் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தருவதற்கு தேவையான தண்ணீர் கர்நாடக மாநில அணைகளில் இருந்தாலும், அதை திறந்துவிட அம்மாநில அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் நடவுப்பருவம் தொடங்க இன்னும் பல வாரங்கள் ஆகும். அதனால், கர்நாடகத்திற்கு காவிரி நீர் உடனடியாக தேவைப்படாது. இப்போது இருக்கும் நீரை தமிழகத்திற்கு கொடுத்து உதவலாம். அவ்வாறு செய்வதன் மூலம் குறுவைப்பயிர்கள் கருகுவதை தடுக்கலாம். ஆனால், கர்நாடக அரசு, சிறிதும் இரக்கமின்றி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது. தமிழக அரசும் இதை கண்டுகொள்ளாமல் கர்நாடகத்தின் துரோகத்தை தட்டிக்கேட்காமல் அமைதி காத்துக்கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை காய்வதற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக ஏதேனும் அதிசயங்கள் நிகழாவிட்டால், குறுவைப் பயிர்களையும், அவற்றை விளைவித்த விவசாயிகளையும் காப்பாற்ற முடியாமல் போய்விடலாம். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் அமைதியை கலைத்துவிட்டு, களத்தில் இறங்கவேண்டும். உடனடியாக தமிழக அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி, பிரதமரை நேரில் சந்தித்து, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தும்படி அழுத்தம் தரவேண்டும். தேவைப்பட்டால் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த இக்குழுவுக்கு முதல்-அமைச்சரே தலைமையேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story