ராகுல் காந்தியின் யாத்திரையால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும்
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் ராகுல் காந்தியின் யாத்திரையால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
தேவகோட்டை,
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் ராகுல் காந்தியின் யாத்திரையால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
மருத்துவ முகாம்
அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய மருந்து பொருட்கள், இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட சுகாதார துறையினர் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். இதில் மாங்குடி எம்.எல்.ஏ., கண்ணங்குடி யூனியன் சேர்மன் சரவணன்மெய்யப்பன், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், கண்ணங்குடி வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் விழிப்புணர்வு
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ள ராகுல் காந்தியின் யாத்திரையால் பொதுமக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படும். தொண்டர்களிடமும் புதிய உற்சாகம் உருவாகும். 35 சதவீத வாக்குகளை பெற்ற பாரதீய ஜனதா கட்சி 60 சதவீத எம்.பிக்களை வைத்துள்ளது. 19 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 10 சதவீத எம்.பி.க்களை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். ஒன்றிணைத்தால் வெற்றி நிச்சயம்.
அந்த கட்சிகளை இணைக்க வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது. காங்கிரசால்தான் அனைத்து கட்சிகளையும் நாடு முழுவதும் ஒன்றிணைக்க முடியும். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி போட்டியிடுவார். ஒருவேளை அவர் இல்லை என்றால், பிரியங்கா காந்தி, சோனியா காந்தி வரலாம். இவர்களுக்குதான் நாடு முழுவதும் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் ஜீரோவாகத்தான் இருக்க முடியும். காங்கிரஸ் கட்சியில் இருந்தால்தான் ஹீரோவாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.