கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்


கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான நாளைய தினம் அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் 2,700 பேருந்துகளும், புறவழிச்சாலையில் இருந்து 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


Next Story