கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்


கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
x

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.

திருவண்ணமாலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story