கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்


கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி சோழமாதேவியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஓய்வு கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

மண்பாண்ட தொழிலாளர்கள்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மண் பானை, சட்டி, அடுப்பு, அகல் விளக்குகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது திருக்கார்த்திகை திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நசிவடையும் தொழில்

மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு காரணமாக மண்ணை பதப்படுத்தும் பணி மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், மேகமூட்டமாக இருப்பதாலும் மண் பதப்படுத்துவது, மண்பாண்ட பொருட்களை தயாரித்து சுடுவதற்கு முன்பு காய வைப்பது உள்ளிட்ட பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது என்றனர். வழக்கமாக 2 நாட்களில் செய்யப்படும் கார்த்திகை அகல் விளக்குகள் இந்த ஆண்டு குறைந்தது 5 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

சமீப காலமாக திருக்கார்த்திகை கொண்டாடும் பொதுமக்கள் அகல்விளக்குகளை வாங்காமல் கடைகளில் விற்கப்படும் எலக்ட்ரானிக் அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கி கார்த்திகை திருவிழாவை கொண்டாடுகின்றனர். இதனால் மண்பாண்ட தொழில் நசிவடைந்து வருகிறது.

கூட்டுறவு பண்டக சாலை அமைக்க கோரிக்கை

கார்த்திகை திருவிழா கொண்டாடுவதற்கு பாரம்பரியமிக்க முறையில் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகள் மிகவும் சிறப்பானது. அவற்றை வாங்கி பொதுமக்கள் அவரவர் வீட்டில் விளக்கு ஏற்றும் போது எங்கள் வீடுகளிலும் ஒளி ஏற்றப்படுகிறது என்று தெரிவித்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் தங்கள் காலத்திற்கு பிறகு மண்பாண்ட தொழில் இருக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே பொதுமக்கள் மண்பாண்டங்களை ஆர்வமாக வாங்கி எங்கள் வாழ்வையும் பலப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தங்களை போன்ற தொழிலாளர்களிடம் இருந்து தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வகையில் சோழமாதேவி கிராமத்தில் மண்பாண்ட கூட்டுறவு பண்டக சாலையை அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஓய்வு கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக வழங்க கோரிக்கை

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை மற்றும் பனிக்காலங்களில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு சார்பில் தற்போது ரூ.5 ஆயிரம் ஓய்வு கால நிவாரண உதவி வழங்கப்படுவதாகவும், கொரோனா காலத்துக்கு பிறகு விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில் ரூ.5 ஆயிரம் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தனர். எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தற்போது நசிந்து வரும் கைவினை தொழிலாக உள்ள மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பதோடு மண்பாண்ட தொழிலுக்கு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து மண்பாண்ட தொழிலை அடுத்த தலைமுறையினர் கைவிடாமல் தொடர்ந்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story