திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை மகாதீப திருவிழா..!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை மகாதீப திருவிழா..!
x
தினத்தந்தி 15 Sep 2023 10:38 AM GMT (Updated: 15 Sep 2023 10:45 AM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை மகாதீப திருவிழா நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.

மூலவர் சன்னதி முன்பு உள்ளதங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெறும். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் மாதம் 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். இதற்காக, 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.

இதையடுத்து, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அக்னி பிழம்பாக காட்சி தரும் அண்ணாமலையாரை குளிர்விக்க தீர்த்தவாரி நடைபெறுவதாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை தீப திருவிழாவின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வரும் 21-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெறும். பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.


Next Story