கோவில்களை தனியாரிடம் கொடுத்தால் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


கோவில்களை தனியாரிடம் கொடுத்தால் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2023 12:30 AM IST (Updated: 5 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசிடம் இருக்கும் கோவில்களை தனியாரிடம் கொடுத்தால் மீண்டும் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

மது விற்பனைக்கு கட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுவிலக்கு என்பது உலகம் முழுவதும் தோற்றுப்போன ஒரு சித்தாந்தம். குஜராத்தில் காந்திபிறந்த மண்ணான போர்பந்தரில்தான் அதிகமாக மது விற்கப்படுகிறது. அரசாங்கம் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக நினைக்கிறேன். அரசாங்கத்திடம் இருக்கும் கோவில்களை தனியாரிடம் கொடுத்தால், அது மீண்டும் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுத்துவிடும்.

தி.மு.க. கூட்டணி வெற்றி

பா.ஜ.க.வின் இந்துத்துவா பார்வை என்பது வட இந்திய, மேல் தட்டு, சமஸ்கிருத வெஜிடேரியன் கொள்கை. இவர்கள் மாறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டவர்களை குறைத்து பார்க்கிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரதமர் ஒரு கருத்தை தெரிவிக்கிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜி.எஸ்.டி.யால் வந்த குழப்பம், பணமதிப்பு இழப்பால் ஏற்பட்ட பாதிப்பு, பா.ஜ.க. எப்படி மதக்கலவரங்களை தூண்டும் அரசாங்கமாக இருக்கிறது, மணிப்பூரில் கலவரங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் எடுத்து சொல்வோம். நிச்சயமாக மக்கள் செவி சாய்ப்பார்கள் என நம்புகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும்.

மக்கள் மனநிலை

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் 70 சதவீதக்கும் மேல் இருக்கிறார்கள். அப்படியென்றால் 50 சதவீதம் இடஒதுக்கீடு போதாது என்ற கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. பா.ஜ.க.வின் சித்தாந்ததிற்கு எதிராக பீகார் மக்கள் கேள்வி கேட்கும் காலம் வந்திருக்கிறது. எனவே வட இந்தியாவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களின் மனநிலை மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.

பேட்டியின்போது மாங்குடி எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய்காந்தி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்புராம், நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story