திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Nov 2023 1:35 PM GMT (Updated: 13 Nov 2023 1:48 PM GMT)

கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 7-வது நாளான 23-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் நிறைவாக, 26-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மேலும், தீபத்திருவிழாவின் தொடக்கமாக தொடர்ந்து 3 நாட்கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 15-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 16-ந் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளர் க.மணிவாசன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, கோவில் உள் பிரகாரங்கள், வெளிப்பிரகாரங்கள். தேரோடும் மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். விழாவுக்கு கூடுதலான பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது பக்தர்களை அனுமதிக்க ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை பின்பற்றவும், 3ம் பிரகாரத்தில் உள்ள இட வசதி அடிப்படையில் எண்ணிக்கையை கணக்கிட்டு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story