100-வது பிறந்தநாளையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதியின் 100-வது பிறந்தநாளையொட்டி கருணாநிதி நினைவிடம், இல்லத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி 100-வது பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்துக்கு முதலில் சென்றார். அங்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர், அண்ணா நினைவிடத்துக்கு அருகில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார்.
கருணாநிதியின் நினைவிடம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் மு.க.ஸ்டாலின் மலர்களை தூவி மரியாதை செய்தார். அங்கு இருந்த கலைஞரின் மார்பளவு சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
மவுன அஞ்சலி
பின்னர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கருணாநிதி சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு, முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை செய்தார். முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அப்போது அவருடன், துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, க.பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி உள்பட பலர் இருந்தனர்.
மலர் தூவி மரியாதை
அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் வளாகம், முரசொலி வளாகம் ஆகியவற்றில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோபாலபுரம், சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி, மரியாதை செய்தார்.
அரசியல் கட்சி தலைவர்கள்...
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதன்படி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொருளாளர் குமரேசன், ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சைதை சுப்பிரமணி, காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன், மாவட்ட தலைவர்கள் செல்லதுரை, இரா.செல்வம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் துரைசாமி உள்பட நிர்வாகிகளும் மரியாதை செய்தனர்.