கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 2 பவுன் நகை பறிப்பு-மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கருப்பூர்:
உதவி பேராசிரியை
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மனைவி சுகன்யா (வயது 35). இவர் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் துறையில் தற்காலிக உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வசந்தம் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
தங்க சங்கிலி பறிப்பு
அப்போது பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் பாலத்தின் அடியில் சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதில் பறிபோன 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் டாலரின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோரிக்கை
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் போதிய அளவில் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கருப்பூர் போலீஸ் நிலைய எல்ைலக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






