கரூர் அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்


கரூர் அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல  மரங்கள்
x

கரூர் அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

அமராவதி ஆறு

கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆகிய 2 ஆறுகள் பாய்ந்து கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகள் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. மேட்டூர் அணை நிரம்பும் போது மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆறு வறண்டு போய் காணப்படுகிறது.

கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்

இந்நிலையில் கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றின் மையப்பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. ஆறு தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. கருவேல மரங்களின் வேர்கள் அதிக அளவில் பூமிக்கடியில் ஊடுருவி சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அதிகபடியான தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொள்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால் உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story