மாவட்டத்தில் முதல் முறையாக கரூர் அரசு மாதிரி பள்ளி தொடக்கம்
மாவட்டத்தில் முதல் முறையாக மாயனூரில் கரூர் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டன.
அரசு மாதிரி பள்ளி
கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாயனூரில் கரூர் அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் பேசியதாவது:- மாதிரி பள்ளிக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டிடங்களை தயார்படுத்தி உள்ளோம்.
சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள்
இந்த மாதிரி பள்ளி கல்வியறிவில் சிறந்து விளங்க அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்துள்ளோம். இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், சமையலறை, ஆய்வகங்கள், இணையதள வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், நூலக வசதி, மாதிரி பள்ளிகளுக்கான சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், விடுதியினை கண்காணிக்க விடுதி காப்பாளர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உங்கள் இலக்கை உயரிய நிலையில் வைத்து படிக்க வேண்டும். கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள்.
திறன் பயிற்சி
மேலும், யோகா, வேலைவாய்ப்புகளுக்கான திறன் பயிற்சி, ஓவிய பயிற்சி போன்ற நற்பண்புகள் கற்று கொடுக்கப்படும். இப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரியில் அதிக அளவில் சேர வேண்டும்.
அவ்வாறு சேர்வதற்கான பயிற்சிகளை நீங்கள் இப்போதே மேற்கொள்ள முன் வரவேண்டும். இந்த மாதிரி பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து வெளியேறும் போது பலவித நற்பண்புகளை பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டன.