வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று நடக்கிறது


வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று நடக்கிறது
x

வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

கரூர்

கரூர்,

வைகாசி திருவிழா

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 8-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதன்பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். கடந்த 13-ந்தேதி பூச்சொரிதல் விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சாத்தப்பட்டன. மேலும் ரிஷப வாகனம், புலி வாகனம், பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளிகிறார். தொடர்ந்து காலை 7.05 மணி அளவில் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் மாவிளக்கும், பால்குடமும், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் விழாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.


Next Story