ஈரோடு மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளை; போலீசாருக்கு சவால் விடும் மர்ம கும்பல் சிக்குமா?


ஈரோடு மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளை; போலீசாருக்கு சவால் விடும் மர்ம கும்பல் சிக்குமா?

ஈரோடு

கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்ற பராசக்தி திரைப்பட வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறுகிறதோ இல்லையோ... கோவில்களில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்பதை ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் நடந்த சம்பவங்கள் எடுத்துக்கூறுகின்றன.

கோவில்களில் கொள்ளை

நம்பியூர் பிலியம்பாளையம் வீரமாத்தியம்மன், மருதகாளியம்மன், வல்ல கருப்பராயன் கோவில்கள், கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோவில், ஈரோடு இந்திராநகர் ஜெயின் கோவில் என கோவில்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

பிலியம்பாளையம் கோவில்களில் சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் உண்டியல் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டது. ஈரோடு ஜெயின் கோவிலில் 8 பவுன் தங்க நகை திருட்டு போனது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் அடுத்தநாளிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்.

பெருந்தலையூர் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தையும், வேறு பொருட்களையும் எடுத்துச்செல்ல முயன்ற போது போலீஸ் ரோந்து வாகனத்தின் எச்சரிக்கை ஒலி கேட்டு கொள்ளையர்கள் பணம் பொருட்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

அமைதி இழப்பு

இந்த திருட்டு மற்றும் கொள்ளைகள் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தெரியவந்தவை. ஆனால் தினமும் அங்கொன்று இங்கொன்றாக கோவில்களில் திருட்டு நடந்து வருகிறது என்ற தகவல்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அமைதியை தேடி பக்தர்கள் கோவில்களுக்கு வருகிறார்கள். ஆனால் கோவிலுக்குள் சென்று வந்தால் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுவது வருத்தத்துக்கு உரியது.

செருப்பு திருட்டு

இதுபற்றி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே பூக்கடை நடத்தி வரும் உமாமகேஸ்வரி கூறியதாவது:-

கோவில்களுக்கு வரும் பக்தர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிக்க முடியாது. இங்கே கோவில் வாசலிலேயே நாங்கள் இருக்கிறோம். கோவிலுக்குள் சென்று வரும் பக்தர்கள் சிலர் ஓடி வந்து, இங்கே எனது புதிய செருப்பை போட்டு இருந்தேன் பார்த்தீர்களா என்று கேட்பார்கள். புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழற்றி போட்டால் கூட, அதை திருடிச்செல்ல ஒரு கூட்டம் பக்தர் வேடத்தில் கோவிலுக்குள் சென்று வருகிறது. இதை எப்படி கண்டுபிடிப்பது.

ஈஸ்வரன் கோவில் முன்பு பக்தர்கள் நிறுத்தும் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்று விடுகிறார்கள். இந்த ஆண்டில் 4 வாகனங்கள் திருட்டுபோயிருக்கின்றன. இவை எல்லாவற்றையும்விட, அன்றாட பிழைப்புக்காக பூ, பழம், தேங்காய் விற்பனை செய்யும் சாதாரண மக்களாகிய எங்களிடம் இருந்தே திருடிச்சென்று விடுகிறார்கள். இதை எல்லாம் எங்கே சொல்வது. பெரிய கோவில்களின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திருடர்கள் கோவில் பகுதியில் வருவதை தவிர்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக விரோத செயல்கள்

பெருந்தலையூர் ஊராட்சி தலைவர் பி.எஸ்.பூபதி கூறியதாவது:-

பெருந்தலையூர் பகுதியில் பவானி ஆற்றங்கரை பொதுமக்கள் சென்று வர வசதியாக இருக்கிறது. மாலை நேரம் முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுக்குடித்து பொழுது போக்குகிறார்கள். போதை தலைக்கேறிய பலரும் அங்கேயே படுத்துக்கொண்டு நள்ளிரவில் போதை தெளிந்த பின்பு அங்கிருந்து செல்கிறார்கள். கு

டிபோதைக்கு அடிமையானவர்கள் தங்கள் போதை தேவைக்காக கொள்ளை அடிக்கவும் தயங்குவதில்லை. சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. வேறு குற்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே கோவிலை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். பவானி ஆற்றங்கரையில் தேவையற்ற நபர்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேதனை

பிலியம்பாளையத்தை சேர்ந்த பக்தர் மூர்த்தி கூறியதாவது:-

நான் வீரமாத்தியம்மன் கோவிலின் தீவிர பக்தராக இருக்கிறேன். எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரமாத்தியம்மன் கோவிலின் பக்தர்களாக இருக்கிறார்கள். கோவிலின் வளர்ச்சிக்காக பக்தர்கள் போடும் உண்டியல் தொகையை திருடர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது பக்தர்களாகிய எங்களுக்கு மிகவும் வேதனை அளித்து உள்ளது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் எந்த கோவிலிலும் நடைபெறக்கூடாது. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து கோவில்களிலும் கோவில் பகுதிகளிலும் கட்டாய ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு பாதுகாப்பு

வல்ல கருப்பராயன் கோவிஈரோடு மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளை; ேபாலீசாருக்கு சவால் விடும் மர்ம கும்பல் சிக்குமா?

ல் நிர்வாகி முருகேஷ் கூறியதாவது:-

பக்தர்கள் கோவில்களுக்கு மன அமைதிக்காக வருகிறார்கள். ஆனால் கோவில்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள், கொலைகள் பயத்தை ஏற்படுத்துகிறது. கோவில்களில் கொள்ளைகள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கோவில்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபகாலமாக ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கொலை -கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க குற்றப்பிரிவு போலீசார் வரம்பின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லும் சுதந்திரம் இருந்தது. மாவட்டத்தில் எந்த பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தாலும் ஒட்டு மொத்த குற்றப்பிரிவு போலீசாரும் சுறுசுறுப்பாகி தங்கள் விசாரணையை தொடங்கி விடுவார்கள்.

அதுபோல குற்ற சம்பவங்கள் முன்கூட்டியே நடப்பதையும் தங்கள் ரகசிய தகவல் அளிப்பவர்கள் மூலம் அறிந்து முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்.

குற்றப்பிரிவில் மூத்த போலீசார், தாங்கள் வேறு பிரிவுக்கு மாற்றம் பெறுவதற்கு முன்பு இளம்போலீசாருக்கு குற்றங்களை கண்டறிவது தொடர்பாக பயிற்சிகளையும் அளித்து விடுவார்கள். சமீபகாலமாக இந்த நடைமுறை இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காவல்துறையில் கணினி மயமாக்கல் என்ற நடைமுறை மூலம் பணிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த பணிகள் மென்மேலும் போலீசாருக்கு பணிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது என்று போலீசார் கூறுகிறார்கள்.

போலீஸ் என்றால் களத்தில் வேலை செய்ய வேண்டும். ஆனால் சமீபகாலமாக ஆவணங்கள் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதால், உயர் அதிகாரிகள் அடிக்கடி புள்ளிவிவரங்கள் கேட்பதாகவும், அதற்கு பதில் சரியாக சொல்லவில்லை என்றால் உடனடியாக பணியிட மாற்றம் அளிப்பதாகவும் போலீசார் வருத்தப்பட்டு கூறுகிறார்கள்.

பணியிடமாற்றம் வழங்கினாலும், மீண்டும் தண்டனை ரத்து செய்யப்படும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள். வழக்கமாக போலீசாரின் நடவடிக்கையால் மற்றவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.

ஆனால் சமீபகாலமாக போலீசார் கடும் மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடைபெறும் குற்றசம்பவங்களை தடுக்கும் உற்சாக மனநிலையில் போலீசார் இல்லை. அதுவே குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

போலீசாருக்கு எதிரான பல சட்டங்களும் போலீசார் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்று போலீஸ்துறையினர் கூறுகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு சீரடையவும், குற்ற நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கவும், கோவில்களில் கூட குற்றம் நடப்பதை தடுக்க முடியாத நிலை மாறவும் உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


Next Story