கடும் குளிர், வெயில், மழையில் தவிக்கும் சாலையோரவாசிகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?- தன்னார்வலர்கள்-மக்கள் கருத்து


கடும் குளிர், வெயில், மழையில் தவிக்கும் சாலையோரவாசிகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?- தன்னார்வலர்கள்-மக்கள் கருத்து

ஈரோடு

ஒரு மனிதன் தன்னுடைய தன்மானத்தை இழந்து வயிற்றுக்காக அடுத்தவரிடம் கையேந்தும் நிலை யாருக்கும் வரக்கூடாது. ஆனாலும் எங்கு பிழையோ தெரியவில்லை. கோவில், ரெயில்நிலையம். பஸ்நிலையம் மற்றும் பொது இடங்களிலும் கைநீட்டி யாசகம் செய்பவர்களை எங்கும் நம்மால் காணமுடியும்.

தங்க இடம் கிடையாது. அடுத்த வேலை உணவு எப்படி வரும் ெதரியாது. பண்டிகை, திருவிழா என எந்த தனிப்பட்ட மகிழ்ச்சியும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக ஏன் என்று கேட்க குடும்ப உறவும் கிடையாது.

இப்படி பட்டவர்களை நாம் காணும்போது ஏப்பா கை, கால் நல்லாத்தானே இருக்கு ஏன் இப்படி பிச்சை எடுக்கிறே என்று நக்கலாக கேட்டிருப்போம். அல்லது, மனம் இறங்கி 10 ரூபாயை போட்டுவிட்டு சென்றிருப்போம். ஆனால் உண்மையில் அனைத்தையும் இழந்தவர்கள் என்றால் இவர்கள்தான்.

மறுவாழ்வு

குடும்ப நபர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பெற்ற பிள்ளைகளுடன் குடும்ப பிரச்சினையால் வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், கவனிக்க ஆட்கள் இல்லாதவர்கள் என பல காரணங்களால் ஆதரவின்றி ஏராளமானவர்கள் சாலையோரம் வசித்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்கள் அளிக்கும் யாசகத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். தங்க இடமின்றி மழை, வெயில், பனி, கொசுக்கடி கொடுமையில் சாலையோரமாக சிரமத்துடன் வசித்து வருகிறார்கள். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் உண்டு. இதுபோன்றவர்களை என்ன செய்வது என்று புரியாத மக்கள் மிரட்டி விரட்டியடிக்கிறார்கள். அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிபவர்களால் பொதுமக்கள் முகம் சுழிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இத்தகைய வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கும் ஒரு நல்ல மனது இருக்கிறது என்பதை உணர்ந்து இளைஞர்-இளம்பெண்கள் அவர்களை அணுகி மீட்டெடுத்து மறு வாழ்வு அளித்து வருகிறார்கள். நீண்ட சடைமுடியுடன், அழுக்கான தோற்றத்துடன் காணப்படும் சாலையோர ஆதரவற்றவர்களை தன்னார்வலர்கள் முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டிவிட்டு புத்தாடைகள் அணிய வைக்கிறார்கள். தொடர்ந்து உறவினர்களிடமோ, ஆதரவற்றோர் இல்லத்திலோ சேர்க்க நடவடிக்கை எடுக்கிறார்கள். ஈரோட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று தன்னார்வலர்கள் செய்யும் சேவைகளால் ஏராளமானோர் மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள்.

ஆதரவுகரம்

இந்த தன்னார்வலர்களின் உயரிய நோக்கம், யாசகர்கள் இல்லாத ஊராக மாற்ற வேண்டும் என்பதே. இந்த நோக்கத்துக்கு ஈரோட்டில் முதல்முதலாக வித்திட்டவர் திருச்சி மாவட்டம் முசிறி பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்த பி.நவீன்குமார். அவர் அட்சயம் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் எம்.இ. பட்டப்படிப்பு படித்து உள்ளேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. தாய் மூட்டு வியாதியால் பாதிக்கப்பட்டவர். அவரால் எழுந்து பணிகளை செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் என்ஜினீயரிங் படிக்க நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்தது. குடும்பத்தில் முதல் பட்டதாரி சலுகை, கல்வி கடன் மூலமாக படித்தேன்.

கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும்போது ஒருமுறை சேலம் பஸ் நிலையத்துக்கு சென்று இருந்தேன். அங்கு ஒரு மூதாட்டி பஸ்சுக்கு காசு கேட்டதால், 10 ரூபாய் கொடுத்தேன். அது மன திருப்தியை ஏற்படுத்தியது. மறுநாள் மீண்டும் அதே பஸ்நிலையத்துக்கு சென்றேன். அப்போது அதே மூதாட்டி மற்றொருவரிடம் பஸ்சுக்கு பணம் கேட்டதை பார்த்தேன். அவரை பின்தொடர்ந்தபோது அவர் யாசகம் பெற்ற பணத்தை மது குடிப்பதற்காக செலவழித்தது தெரிய வந்தது. எனவே யாசகர்களுக்கு பணமாக கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.

அட்சய பாத்திரம்

நான் விவேகானந்தர், அப்துல்கலாம் புத்தகங்களை படித்தபோது எனக்குள் மாற்றம் ஏற்பட்டது. யாசகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நண்பர்களிடம் இதுபற்றி கேட்டபோது, நீ தனிஒருவனாக எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள். ஆனால் நான் மட்டும் சேலம் பஸ் நிலையத்தில் யாசகம் பெற்ற ஒருவரிடம் சென்று பேசினேன். அவர் ஒரு விபத்தில் குடும்பத்தை இழந்ததால் இந்தநிலையில் இருப்பதாக வேதனையுடன் கூறினார். அவரை மீட்டு ஒரு காப்பகத்தில் காவலாளி பணிக்கு சேர்த்துவிட்டேன். இந்த தொடக்கம் தான் தற்போது ஒரு குழுவாக சேர்ந்து 1,145 பேரை மீட்டெடுத்து மறு வாழ்வு அளிக்க முடிந்தது.

அட்சய பாத்திரத்தைபோல எங்களது சேவை எப்போதும் குறையக்கூடாது என்று அட்சயம் அறக்கட்டளையை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினேன். தொடக்கத்தில் அதிக துயரத்தையும், அவமானத்தையும் சந்திக்க நேர்ந்தது. அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து சேவை புரிந்ததற்கு பரிசாக மத்திய அரசால் தேசிய இளைஞர் விருதும், மாநில அரசால் முதல்-அமைச்சரின் இளைஞர் விருதும் கிடைத்தது. அதன்பிறகு என்னை அவமானப்படுத்தியவர்களும் எனக்கு அங்கீகாரம் அளித்து மரியாதை கொடுத்தார்கள். தற்போது ஈரோட்டை மையமாக வைத்து 18 மாவட்டங்களில் ஆதரவற்றவர்களை மீட்டு வருகிறோம். மக்களும் தங்களது பகுதிகளில் ஆதரவற்றவர்கள் சுற்றி திரிந்தால் எங்களை தொடர்பு கொள்கிறார்கள். சாலையோரமாக வசிப்பவர்களை மீட்டு எடுப்பதுடன் விட்டுவிடாமல் அவர்களுக்கு மருத்துவ உதவி, பணி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறாம்.

தனித்துறை வேண்டும்

ஆதரவற்றவர்களை மீட்கும் அளவுக்கு அவர்களை தங்க வைக்க காப்பகம் வசதி மிகவும் குறைவாக உள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளோம். எங்களது அமைப்பு சார்பில் சோலார்புதூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில், மீட்கப்பட்ட 80 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறோம். அவர்களுக்கு ஊதுபத்தி, பேப்பர் கப் தயாரிப்பது போன்ற சிறுதொழில்கள் பயிற்சி அளித்து வருகிறோம். ஆதரவற்றவர்களை மீட்கும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே அரசின் உதவி அவசியம் தேவைப்படுகிறது.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது "பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்" கொண்டு வந்தார். இதற்காக சென்னை ஆவடி, தாளவாடி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் காப்பகங்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் முறையாக செயல்படுத்த முடியாத காரணத்தால் தொழுநோய் திட்டத்துக்கு காப்பகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தை புத்துயிர் பெற வைத்து ஆரவற்றவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த இல்லங்களை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தயாராக உள்ளன. மேலும் எங்களது அமைப்பு சார்பில் புதிய காப்பகம் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆதரவற்றவர்களை மீட்கும்போது மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என எந்த அதிகாரிகளை சந்திப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு தனித்துறையை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும் பிச்சைக்காரர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் பி.நவீன்குமார் கூறினார்.

பிரத்யேக விடுதி

ஜீவிதம் பவுண்டேசன் நிறுவனர் மனீஷா கூறியதாவது:-

எனது சிறு வயதில் இருந்தே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் எனது குடும்பத்தில் உள்ளவர்கள், ஒரு பெண்ணாக இருந்து என்ன செய்ய முடியும் என்று கூறினார்கள். நான் செவிலியர் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போதும் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்தேன். இதையடுத்து ஈரோட்டில் தன்னார்வ அமைப்புடன் இணைந்து சேவை செய்தேன். 2018-ம் ஆண்டு ஜீவிதம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கினேன். இதுவரை எங்கள் அமைப்பின் மூலமாக 486 பேரை மீட்டு உள்ளோம். ஒருவரை மீட்க வேண்டுமென்றால் அவரை பின் தொடர்ந்து ஒரு வாரம் விசாரிக்க வேண்டும். அதில் ஒருசிலர் ஆக்ரோஷமாக இருப்பார்கள். அவர்கள் எங்களை தாக்கியும் உள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் பரிவுடன் பேசி மீட்டுள்ளோம்.

இந்த மீட்பு பணிக்கு ஆண்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள். எனது தலைமையில் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் நேரம் பாராமல் சேவை செய்கிறோம். இதை எல்லாம் உதாசீனப்படுத்தும் வகையில் ஒரு சிலர் என்னை கிண்டல் செய்து அவமானப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். இதுபோன்ற செயல் மனவேதனை அடைய வைக்கிறது.

நாங்கள் மீட்பவர்களை விழுப்புரம், புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் உள்ள இல்லங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கிறோம். ஆனால் அங்கும் இடம் கிடைக்காதபோது மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், இறக்கும் தருவாயில் இருப்பவர்களை விடுதிகளில் சேர்த்து கொள்வதில்லை. எனவே ஆதரவற்றோர் தங்கும் வகையில் பிரத்யேகமாக விடுதி அமைக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

யாசகர்களுக்கு பணமாக உதவி செய்யக்கூடாது. அது அவர்களை சென்றடையாது. பணத்தை மது குடிப்பதற்கும், போதை பழக்கத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் தேவையை பொறுத்து பொருட்களாக வாங்கி கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனநல ஆலோசனை

தாய்மை அறக்கட்டளை நிறுவனர் மணிமேகலை கூறியதாவது:-

ஏழ்மை நிலையில் மிகவும் சிரமப்படுபவர்களை தேடி சென்று உதவிகளை செய்து வருகிறோம். இதேபோல் சாலையோரமாக தங்கி இருந்த 200-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு உள்ளோம். கொரோனா ஊரடங்கில் சாலையோரமாக தாங்கியிருந்தவர்களை அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைத்தனர். அதில் ஒரு பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு உணவு வழங்கி பராமரித்து வந்தோம். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் வரை ஒழுக்கமாக இருந்தார்கள். அதன்பிறகு அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

பொதுவாக சாலையோரமாக தங்குவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்க வேண்டும். அதில் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், அரசு அதிகாரிகள் இடம் பெற வேண்டும். ஒரு விடுதியை ஏற்படுத்தி அதில் அவர்கள் தங்க வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். சாலையோரத்தில் தங்கி இருப்பவர்களுக்கு ஏராளமானவர்கள் உணவுகளை தேடி சென்று கொடுக்கிறார்கள். அதில் ஒருசிலர் மட்டுமே தேவைக்கு பெற்றுக்கொள்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அனைத்து சாப்பாடுகளையும் வாங்கி பிரித்து பார்த்துவிட்டு பிடித்ததை மட்டும் சாப்பிடுகிறார்கள். மற்ற உணவுகளை வீணாக குப்பையில் கொட்டுகிறார்கள். மேலும் பணத்தை யாசகமாக பெறும் பலர் போதை பழக்கத்துக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கு மனநல ஆலோசனையும், மருத்துவ உதவியும் தேவைப்படுவதால் அந்த வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலைக்கு முயன்றேன்

ஈரோட்டில் ஆதரவற்றோர் முகாமில் தங்கியிருக்கும் ரத்தினம்மாள் (வயது 88) என்ற மூதாட்டி கூறியதாவது:-

எனது கணவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களும் திருமணத்துக்கு பிறகு என்னை கவனித்து கொள்வதில்லை. இதனால் மகள் வீட்டில் தங்கியிருந்தேன். ஆனால் மகளின் மகன்களும் வளர்ந்துவிட்ட பிறகு என்னை வீட்டில் இருந்து வெளியேற்றும்படி மகளிடம் சண்டையிட்டனர். இதனால் நான் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒருவர் எனக்கு ஈரோட்டில் அட்சயம் அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முகாம் செயல்படுவதாக முகவரியை கொடுத்தார். எதற்கும் வந்து பார்க்கலாம் என்று வந்தேன். இங்கு என்னை போன்ற பலரும் இருக்கிறார்கள்.

எங்களுக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி போன்றவற்றை சிறந்த முறையில் செய்து வருகிறார்கள். இனிமேல் எனது பிள்ளைகள் அழைத்தாலும் போக மாட்டேன். கடந்த ஒரு ஆண்டாக இங்கே நிம்மதியாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடைக்கலம்

பவானி லட்சுமிநகரை சேர்ந்த சக்திவேல் (21) என்ற வாலிபர் கூறியதாவது:-

எனக்கு 2 வயது இருக்கும்போது தந்தை ராஜன், தாய் கவிதா ஆகியோர் விபத்தில் இறந்துவிட்டனர். வீட்டுக்கு அருகில் இருந்தவர் எடுத்து வளர்ந்து வந்தார். அதன்பிறகு விடுதியில் சேர்ந்து பள்ளிக்கூடம் சென்று வந்தேன். 10-ம் வகுப்பு வரை படிக்க முடிந்தது. பிறகு ஆதரவுக்கு யாரும் இல்லாததால் ரிக் வண்டியில் வேலைக்கு சென்றேன். அங்கு துரதிர்ஷ்டவசமாக எனது கையில் காயம் ஏற்பட்டது. நான் வேலை பார்த்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டார்கள். அதன்பிறகு தன்னார்வலர்கள் என்னை மீட்டு வந்து முகாமில் சேர்த்தனர்.

என்னைப்போல் ஏராளமானவர்கள் தங்க இடமில்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே ஆதரவற்றோருக்கு இருப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு சாலையோர நடைபாதையே அடைக்கலம் கொடுக்கிறது. நாளுக்குநாள் சாலையோரவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பான வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story