வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வீணாகும் தண்ணீர்; முட்புதர் சூழ்ந்து காணப்படும் உபரிநீர் செல்லும் பாதை சீரமைக்கப்படுமா?- விவசாயிகள் கோரிக்கை


வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வீணாகும் தண்ணீர்; முட்புதர் சூழ்ந்து காணப்படும் உபரிநீர் செல்லும் பாதை சீரமைக்கப்படுமா?- விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி செல்லும் பாதை முட்புதராக மூடிக்கிடக்கிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்தம் நீர்மட்ட உயரம் 33.46 அடியாகும். தற்போது 25.46 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. பர்கூர் மலைப்பகுதியில் ெபய்யும் மழை தண்ணீர் கும்பரவானி மற்றும் கள்ளுபள்ளம் என்ற 2 ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து சேரும். அணை நிரம்பினால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறி கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சத்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும்.

புதராக உள்ளது

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நேரடியாக 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏரிகளில் இருந்து செல்லும் தண்ணீர் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்தநிலையில் அணையில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் பாசன பகுதிக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் பல இடங்களில் முட்செடிகள் வளர்ந்து மூடிக்கிடக்கின்றன. மழை காலங்களில் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி அதிக அளவில் உபரிநீர் வெளியேறும். அதுபோன்ற நேரங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகின்றன.

கான்கிரீட் வாய்க்கால்

மழை காலங்களில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் அப்பகுதி விவசாயிகள் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வழித்தடங்களில் வாய்க்கால் வெட்டி, கான்கிரீட் தளம் அமைத்து கொடுக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அவ்வாறு கான்கிரீட் வாய்க்கால் அமைக்கப்பட்டால் வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாசனத்துக்கு பயன்படும். மேலும் விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் புகாது என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகளை பார்ப்போம்:-

சீரமைக்கவேண்டும்

அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி அருள்:-

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு முறையான பாசனம் செய்ய பயன்படுவதில்லை. நீர்வழித்தடங்களில் முட்புதராக காணப்படுகின்றன. சில இடங்களில் நீர் செல்லும் பாதையா இது? என்று கேட்கும் நிலை உள்ளது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது வழித்தடம் இல்லாமல் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பல ஏக்கர் பயிர்கள் இதுவரை நாசமாகியுள்ளது. தோட்டங்களில் தண்ணீர் தேங்கினால். அது வடிவதற்கு மாத கணக்கில் ஆகிறது. எனவே நீர்வழிப்பாதையை விரைந்து சீரமைக்கவேண்டும்.

நீண்ட நாள் பிரச்சினை

கெட்டிசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி மகாவிஷ்ணு:-

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் நீர்த்தடமும், கெட்டிச்சமுத்திரம் ஏரி நீர்வழிப் பாதையும் பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ளன. அணையில் இருந்து தண்ணீர் முறையாக ஏரிகளுக்கு செல்வதில்லை. வரும் வழியிலேயே வீணாகிறது. இல்லை என்றால் தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் இந்த பிரச்சினை இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதனால் பாசனத்துக்கு பயன்படும் தண்ணீர் பாழாகிறது.

மண் திட்டாக உள்ளது

ராசா குளம் பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி:-

கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து உபரி நீர் அந்தியூர் ராசாங்குளம் ஏரிக்கு செல்கிறது.

ஆனால் நீர்வழிப்பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மண் திட்டாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ெபாதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வழிப்பாதையை அளவீடு செய்து அதை பெரிய வாய்க்கால் போல் வெட்டி அமைத்து தரவேண்டும்.

முறையான வழித்தடம் இல்லை

வரட்டுப்பள்ளம் அணை பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி:-

வரட்டுப்பள்ளம் அணையையும், ஏரிகளையும் நம்பி 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் முறையான நீர்வழித்தடம் இல்லை. இதனால் விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வீணாகிறது. அதிகாரிகள் வந்து பார்த்து நீர்வழிப்பாதையை சீரமைத்து கொடுத்தால் தண்ணீர் வீணாகாது. இது நீண்டநாள் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story