கீரிப்பட்டி கோவில் தேரோட்டம் திடீர் நிறுத்தம்


கீரிப்பட்டி கோவில் தேரோட்டம் திடீர் நிறுத்தம்
x

ஐகோர்ட்டு தடையை விழாக்குழுவினர் மீற அதிகாரிகள் தடை விதித்த நிலையில் கீரிப்பட்டி கோவில் தேரோட்டத்தை விழாக்குழுவினர் திடீரென நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

தம்மம்பட்டி:-

ஐகோர்ட்டு தடையை விழாக்குழுவினர் மீற அதிகாரிகள் தடை விதித்த நிலையில் கீரிப்பட்டி கோவில் தேரோட்டத்தை விழாக்குழுவினர் திடீரென நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவு

தம்மம்பட்டி அடுத்துள்ள கீரிப்பட்டியில் மாரியம்மன், எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.

இந்த நிலையில் அறநிலையத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 23-ந் தேதி அன்று மாரியம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

இதனிடையே கோவில் தேரில் விழாக்குழுவினர் அமர்ந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று அதே ஊரை சேர்ந்த மஞ்சுநாதசுவாமி (வயது 41) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனிநபர் யாரும் தேரின் மீது ஏறக்கூடாது. மேலும் தேரில் சாமிக்கு வழிபாடு நடத்தும் அர்ச்சகர் மட்டும் தேரில் ஏற அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாரியம்மன் தேரோட்டம்

இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி மாரியம்மன் தேரோட்டம் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் நடந்தது. அப்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவில் விழாக்குழுவினர் யாரும் தேரில் அனுமதிக்கப்படவில்லை, பூசாரி மட்டுமே தேரில் ஏறி சாமிக்கு வழிபாடு நடத்தினார்.

இந்த தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று எல்லையம்மன் தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக எல்லையம்மன் உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட தேருக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம் நிறுத்தம்

பின்னர் காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்க இருந்தது. அப்போது ஐகோர்ட்டின் உத்தரவை மீறி விழாக்குழுவினர் தேரில் ஏற முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள், கோர்ட்டு உத்தரவை மீறி விழாக்குழுவினர் யாரும் தேரில் ஏறக்கூடாது என்று கூறினர். அதிகாரிகளின் இந்த முடிவை விழாக்குழுவினர் ஏற்க மறுத்து தேரோட்டத்தை திடீரென நிறுத்தி விட்டனர். இதையடுத்து கிராம மக்கள் நிறுத்தப்பட்ட தேர் முன்பு தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

தேரோட்டம் நிறுத்தப்பட்டதை அடுத்து கீரிப்பட்டியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story