கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் கோவில் திருவிழா
கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
காரைக்குடி
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கீழப்பூங்குடியில் நாச்சியாரம்மன் கோவிலில் 12-ம் படைப்பு விழா நடைபெற்றது. குன்னங்கோட்டை நாடு நான்கு கரை வேளார் வம்சாவழி பங்காளிகள் மற்றும் கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் படைப்பு விழா குழுவினர் சார்பில் இந்த விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் 12-ம் படைப்பு விழா குழு தலைவர் நேரு என்ற காளியப்ப வாத்தியார், செயலாளர் சுப சந்திரசேகரன், பொருளாளர் சித.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
நாச்சியாரம்மன் கோவில் மண்டபம் முன்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு ஓம் வடிவில் 1,008 சங்குகள் மற்றும் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. பின்னர் கள்ளீஸ்வரமுடைய அய்யனார் கோவிலுக்கு பால்குடம் மற்றும் சந்தனக் குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நாச்சியாரம்மனுக்கு சங்குகளில் உள்ள புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாகவேள்விகளை கணசந்திரன், நேரு, சுகுமாறன், குபேரன், பாஸ்கரன், ஹரி, வினோத்கண்ணன், பாண்டிசெல்வம் உள்ளிட்ட 40 வேளார் வம்சாவளி சிவாச்சாரியார்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை குன்னங்கோட்டை நாடு நான்கு கரை வேளார் வம்சாவளி பங்காளிகள், நாச்சியாரம்மன் 12-ம் படைப்பு விழா குழுவினர் மற்றும் கீழப்பூங்குடி கிராமத்தார் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.