இந்தி பயிற்று மொழி விவகாரம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்...!


இந்தி பயிற்று மொழி விவகாரம்:  கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்...!
x

'உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்' என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயர் கல்வி நிறுனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுன்றக் குழுவின் 11-வது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆங்கிலம் மூலம் பயிற்றுவிப்பதை விருப்பத் தேர்வாக மாற்றலாம் எனவும் குழு தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

'இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதில் ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க முடியாது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை மட்டும் முதன்மை மொழியாவோ அல்லது பயிற்று மொழியாகவே மாற்ற முடியாது. ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் பாதி பேருக்கு மேல் உள்ளவர்களை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சமூக நலனுக்கு நல்லது இல்லை.

கல்வித் துறையில் மாநிலம் சார்ந்த பார்வைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். பயிற்று மொழிகள் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய மொழிகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மற்ற மொழிகளை விட ஒரு மொழியை மட்டுமே பயிற்று மொழியாக முன்னிலைப்படுத்துவது திணிப்பாகவே பார்க்கப்படும். இது, நம்முடைய கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை. எனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி பயிற்சி மொழி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே கருத்தை வலியுறுத்தியிருந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு இந்தியை புகுத்தி மீண்டும் ஒரு மொழிப்போரை எங்கள் மீது தூண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story