திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்... வீட்டின் முன் அமர்ந்து கேரள பெண் திடீர் தர்ணா


திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்... வீட்டின் முன் அமர்ந்து கேரள பெண் திடீர் தர்ணா
x

விசாரணை நடந்துகொண்டிருந்த போது தாரா மித்ரா நிரஞ்சனா திடீரென மயங்கி விழுந்தார்.

சென்னை,

திருவனந்தபுரம் அவனவன் சேரி அயிலம் பகுதியை சேர்ந்தவர் தாரா மித்ரா நிரஞ்சனா (வயது 41). இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தாரா மித்ரா நிரஞ்சனா கூறியதாவது, 'எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை விவாகரத்து செய்து விட்டேன். பின்னர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இந்தநிலையில் நண்பர் ஒருவர் மூலமாக பார்வதிபுரம் சாரதா நகரை சேர்ந்த 45 வயதான நபருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் பெண் பார்த்து வருவதாக கூறினார். நாளடைவில் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். பின்னர் அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். இதற்கிடையே திருவனந்தபுரம் பகுதிக்கு வந்து ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினேன்.

இந்த நிலையில் அவர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். உடனே நான் 25 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டேன். அவரும் விரைவில் திருமணம் செய்வதாக கூறினார்.

ஆனால் அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தியதோடு திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்தார். மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் நகையை தர மறுத்தார். இதுமட்டுமின்றி நானும், அவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும்.

இதை தொடர்ந்து தாரா மித்ரா நிரஞ்சனாவிடம் புகார் மனு எழுதி தரும்படி போலீசார் கேட்டனர். இதற்கிடையே விசாரணை நடந்துகொண்டிருந்த போது தாரா மித்ரா நிரஞ்சனா திடீரென மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலன் வீட்டு முன் காதலி தர்ணா போராட்டம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story