கேரள வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கூடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில், கேரள வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி
கூடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில், கேரள வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இளம்பெண்ணுடன் காதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோகி (வயது 60). இவருடைய மனைவி கிரிஜா (55). இவர்களுக்கு 27 வயதில் மகள் உள்ளார். கிரிஜாவின் தாயார் அம்மினி என்ற அன்னம்மாள் (72). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஜோகியின் மகள் கடந்த 2010-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். அப்போது, வயநாடு மாவட்டத்தை சேர்ந்த லெனின் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.
படிப்பு முடிந்த பின்னர் அந்த இளம்பெண் கொச்சியில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே ஒரு கட்டத்தில் இளம்பெண்ணுக்கு லெனின் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் லெனினுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இருப்பினும், தன்னுடன் பேசுமாறு லெனின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார்.
அடித்துக்கொலை
இதையடுத்து ஜோகி தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். இதை அறிந்த லெனின் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ஜோகியிடம் கூறியுள்ளார். அதற்கு ஜோகி குடும்பத்தார் மறுப்பு தெரிவித்தனர். கடந்த 21-6-2014-ந் தேதி ஜோகி வீட்டிற்கு சென்ற லெனின், இளம்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அவர் இரும்பு கம்பியால் இளம்பெண்ணை தாக்கினார். இதை தடுக்க முயன்ற ஜோகி, கிரிஜா, அன்னம்மாள் ஆகிய 3 பேரையும் லெனின் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் நியூ ஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லெனினை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் தாய், தந்தை மற்றும் பாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்த லெனினுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை அனுபவிக்கும் காலத்தில் எந்த ஒரு சலுகையும் குற்றவாளிக்கு வழங்கக்கூடாது என தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினர்.