அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது


அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2023 3:30 AM IST (Updated: 12 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ்சில் 3 கிலோ கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ்சில் 3 கிலோ கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் ஊட்டிக்கு சாலைகள் செல்கிறது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லையில் போலீசார், வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஊட்டி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று கக்கநல்லாவில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டியை நோக்கி வந்த கர்நாடக அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்த ஒரு வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

இதில் அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மங்கள்பாடியை சேர்ந்த அப்துல் நசீர் (வயது 29) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது. பின்னர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல் நசீரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அப்துல் நசீர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கூறும்போது, கைது செய்யப்பட்ட அப்துல் நசீர் மீது கேரளாவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.


Related Tags :
Next Story