50 விநாயகர் சிலைகள் கீழ் பவானி வாய்க்காலில் கரைப்பு
காங்கயத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 விநாயகர் சிலைகள் கீழ் பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள்
காங்கயம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், சிவன்மலை, படியூர், சம்பந்தம்பாளையம், குங்காருபாளையம் உள்ளிட்ட 50 இடங்களில் 3 அடி முதல் 8 அடி வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, விளையாட்டு போட்டி, அன்னதானம் நடைபெற்றது.
இந்த சிலைகள் அனைத்தும் டிராக்டர், வேன், கார்களில் வைத்து காங்கயம் உடையார் காலனிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரைப்பு
ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் கோஷங்களுடன் சென்ற ஊர்வலம் பழையகோட்டை சாலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் அனைத்து சிலைகளும் அங்கிருந்து திட்டுபாறை கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கயம் போலீசார் செய்திருந்தனர். அதன்படி கீழ் பவானி வாய்க்காலில் 50 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.