கடத்தி சென்ற காதலி விபத்தில் பலி; நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் விட்டு சென்ற காதலன்...!


கடத்தி சென்ற காதலி விபத்தில் பலி;  நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் விட்டு சென்ற காதலன்...!
x

அபர்ணாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெறிச்சோடிய குளச்சல் கடற்கரை சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்

கன்னியாகுமரி

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற போது விபத்து ஏற்பட்டு மாணவி பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தமிழரசி தனது 2 மகள்களுடன் சக்கப்பற்றில் உள்ள ஒரு உறவினரின் பராமரிப்பில் வசித்தார்.

இவர்களில் மூத்த மகள் அபர்ணா (வயது 16). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இதற்கிடையே இவருக்கும் குளச்சல் களிமாரை சேர்ந்த விஜூகுமார் (19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அபர்ணாவின் வீட்டினர் கண்டித்தனர்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அபர்ணா வீட்டில் தனிமையில் இருந்த போது விஜூ அவரை பார்க்க சென்றார். அப்போது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றார்.

அபர்ணாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெறிச்சோடிய குளச்சல் கடற்கரை சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.

இருவரும் மண்டைக்காடு அருகே வெட்டுமடை பகுதியில் வந்த போது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அபர்ணாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அபர்ணாவை சாலையில் விட்டுவிட்டு அந்த வாலிபர் பைக்கை ஓட்டிச் சென்று விட்டார். பல மணி நேரம் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அபர்ணாவை பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக அபர்ணா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி அபர்ணா நேற்று பரிதாபமாக இறந்தார்.

விஜூ தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் உறவினர் மதியழகன் குளச்சல் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விஜூ மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த மாணவி இறந்ததால் விஜூ மீது 304 (ஏ) (விபத்தில் மரணம்) பிரிவின் கீழ் குளச்சல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை கடத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விஜூ போதைக்கு அடிமையானவர் என்ற புகார் எழுந்துள்ள நிலையில் விபத்து நடைபெற்ற போது போதையில் இருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story