கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் செப்டம்பர் மாதம் திறப்பு - அமைச்சர் முத்துசாமி


கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் செப்டம்பர் மாதம் திறப்பு - அமைச்சர் முத்துசாமி
x

பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

செங்கல்பட்டு

சென்னை கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தொடங்கப்பட்டது. 88.52 ஏக்கர் நிலத்தில் ரூ.393.74 கோடி செலவில் 14 நடைமேடைகளுடன் பிரமாண்டமாக இந்த பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.

எனவே சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம், 'கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் எப்போது முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்?' என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர், 'பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.' என்று பதிலளித்தார்.


Next Story