பண்ருட்டியில் தேர்தல் முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகரின் குடும்பத்தினர் 7 பேருக்கு கத்தி வெட்டு வி.சி.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது
பண்ருட்டியில் தேர்தல் முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகரின் குடும்பத்தினர் 7 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை செட்டிப்பட்டறை காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 46). தி.மு.க. பிரமுகர். இவர், பண்ருட்டி நகராட்சி 11-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இதே வார்டில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கார்த்திகேயன் போட்டியிட்டார். இதில் கார்த்திகேயன் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் குமார், தனது மகன் ஹரிசுடன்(17) செட்டிப்பட்டறை காலனி அருகில் நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கார்த்திகேயன், ஏன் இங்கு வந்தீர்கள்? என்று கூறி, அவர்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
7 பேருக்கு கத்தி வெட்டு
இந்த நிலையில் கவுன்சிலர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் வெற்றிவேல்(34), சாய்குமார், பிச்சாண்டவர், ராஜலிங்கம் மகன் ராஜவர்மன் (28), ரங்கநாதன் மகன்கள் சவுந்தர்குமார், சாய்குமார், சேகர் மகன் சாந்தகுமார், வெங்கடாசலம் மகன் ராஜாங்கம், சசிகுமார் மகன் சுபாஷ், முருகன் மகன் திருமலைவாசன், கவுன்சிலர் கார்த்திகேயன் மகன் நித்திஷ், ஆறுமுகம் மகன் அபிஷேக் ஆகிய 12 பேர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கவுன்சிலர் கார்த்திகேயனுடன் சேர்ந்து கத்தி, தடியுடன் வந்து குமார், ஹரிசை தாக்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரின் மனைவி ராணி(40), மகன் தனுஷ் (19), மகள் பிரியா(15) மற்றும் உறவினர் ஆறுமுகம் மகன்கள் அருள் செல்வன் (28), அருண்குமார் (27) ஆகியோர் தடுக்க வந்தனர். அவர்களையும் கார்த்திகேயன் தரப்பினர் தாக்கி, கத்தியால் வெட்டினர்.
மருத்துவமனையில் அனுமதி
இது பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கத்தி வெட்டால் படுகாயமடைந்த குமார் உள்பட 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
4 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட 13 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் கவுன்சிலர் கார்த்திகேயன், அவரது தம்பி வெற்றிவேல், ராஜவர்மன், சவுந்தா்குமார்(22) ஆகியோரை கைது செய்தனர். மற்ற 9 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.