கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய வந்துள்ளன - ஐகோர்ட்டில் போலீசார் தகவல்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய வந்துள்ளன - ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
x

கோப்புப்படம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள், புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக போலீசார் தற்போது மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி மற்றும் அவரது உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட மனோஜ், சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனோஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதனால் வழக்கு விசாரணைக்கு எந்த கால வரம்பும் நிர்ணயம் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Next Story