கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலே ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் அப்போது விபத்து வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கனகராஜ் அண்ணன் கைது

இதற்கிடையில் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து தொடர்பாக மீண்டும் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் ஆத்தூரை சேர்ந்த அவருடைய நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தடயங்களையும், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை மறைப்பதற்கு துணை போனதாகவும் தனபால், ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மீண்டும் விசாரணை

இதற்கிடையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும், தம்பி கனகராஜ் சாவும் மர்மமாக இருக்கிறது என்றும் ஜாமீனில் வெளியே வந்த தனபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் தனிப்படை போலீசார் கனகராஜ் இறப்பு குறித்து நேற்று சூரமங்கலம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story