கொடுங்கையூரில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்


கொடுங்கையூரில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்
x

கொடுங்கையூரில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு, குமாரசாமி ராஜாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பா என்ற ரகுபதி (வயது 30). ரவுடியான இவர் மீது புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொல்லை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர், புளியந்தோப்பில் இருந்து கொடுங்கையூர் முத்தமிழ்நகர் தெற்கு அவென்யூ பகுதிக்கு குடியேறினார். ரகுபதி தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று காலை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்காக ரகுபதி காத்திருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகுபதியை சுற்றி வளைத்து வெட்டினர்.

ரகுபதி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் மர்மகும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, முதுகு, கை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ரகுபதி, ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இது குறித்து தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரகுபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரகுபதி பரிதாபமாக இறந்தார்.

கொடுங்கையூர் போலீசார் ெகாலையான ரகுபதி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடி ரகுபதியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story
  • chat