நவராத்திரி விழாவையொட்டி விழுப்புரம் பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
நவராத்திரி விழாவையொட்டி விழுப்புரம் பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் கைவினை தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நவராத்திரி விழா
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முடிந்து மறுநாள் நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. தொடர்ந்து 9 நாட்கள் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையை 3 வடிவங்களில் 9 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய விழாவாக நவராத்திரி விழா உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க நவராத்திரி விழாவானது வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்நாட்களில் கோவில்கள், வீடுகளில் 9, 7, 5 என படிகள் அமைத்து கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதில் முதல் 3 நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த 3 நாட்கள் துர்க்கையம்மனுக்கும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் நவதானியங்களை வைத்து படையல் செய்து வழிபடுவார்கள்.
கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி
இவ்விழாவின்போது பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள், சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வது நவராத்திரியின் அங்கமாக உள்ளது. இதனால் நவராத்திரி விழா தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் விதவிதமான வடிவங்களில் கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணியில் கைவினை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், இயற்கையை பாதிக்காத வண்ணம் காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு, வண்டல் மண் ஆகியவற்றின் மூலம் ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரையிலான கொலு பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, ஒசூர், மைசூர், பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஆர்டரின்பேரில் விற்பனைக்காக அனுப்பப்பட உள்ளது.
கூடுதல் விலை
இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினை தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்த கொலு பொம்மைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் இப்போதே ஆர்டர்கள் வந்துள்ளது. தற்போது விநாயகர், முருகன், ஆண்டாள், மீனாட்சி, காமாட்சி, காளியம்மன், பைரவர் உள்ளிட்ட 35 வடிவிலான கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
இவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொலு பொம்மைகளை சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால்தான் எங்களுக்கு ஓரளவுக்காவது கட்டுப்படியாகும் என்றனர்.