கரூரில் விற்பனைக்காக குவிந்த கொலு பொம்மைகள்


கரூரில் விற்பனைக்காக குவிந்த கொலு பொம்மைகள்
x

நவராத்திரி விழாவிற்காக கரூரில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கரூர்

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி விழாவாகும். நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாகும். இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள், விலங்கின பொம்மைகள், இயற்கை காட்சிகள் அடங்கிய பொம்மைகள், தெய்வீக பொருட்கள் உள்பட பலவகையான கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் இந்த விழா நாட்களில் இரவில் பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். துர்கா தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் வழிபாடாக இருக்கும்.

கொலு பொம்மைகள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜையாகும். வருகிற 24-ந் தேதி விஜயதசமி பண்டிகையாகும். நவராத்திரி விழாவையொட்டி கரூரில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வந்துள்ளன. கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சிறிய பொம்மைகள் ரூ.20 முதல் ரூ.2,500 வரை பல்வேறு விதமான பொம்மைகள் அடங்கிய கொலு செட்டுகள் விற்கப்படுகிறது. கொலு வைத்து வழிபாடு நடத்தக்கூடியவர்கள் ஆர்வமாக தற்போதே பொம்மைகளை வாங்கத்தொடங்கி விட்டனர். கொலு வைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதேபோல கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடத்திற்கும் பணிகள் நடைபெறுகிறது.


Next Story