கொலு பொம்மைகள் விற்பனை படுஜோர்


கொலு பொம்மைகள் விற்பனை படுஜோர்
x

நவராத்திரி விழாவையொட்டி குமரியில் கொலு பொம்மைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. வருகிற 26-ந் தேதி முதல் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நவராத்திரி விழாவையொட்டி குமரியில் கொலு பொம்மைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. வருகிற 26-ந் தேதி முதல் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படுகிறது.

நவராத்திரி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி போல ஆதிபராசக்திக்கு உகந்த ராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி ஆகும். நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டில் கொரோனா காரணமாக நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. தற்போது கொரோனா குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது.

கொலு பொம்மை விற்பனை

விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விதவிதமான கொலு பொம்மைகள் வந்துள்ளன. இந்த விற்பனையும் படுஜோராக நடக்கிறது.

நாகர்கோவிலில் கோட்டார் வடிவீஸ்வரம், கட்டபொம்மன் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆறாட்டு சாலை, செட்டிகுளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மை விற்பனை நடக்கிறது.

இங்கு ரூ.100 முதல் ரூ.7 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்கிச் செல்வதை காண முடிந்தது.

விதவிதமான பொம்மைகள்

குமரியில் உள்ள கடைகளில் மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story