கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்


கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
x

அண்ணாமலைநகர் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது.

கடலூர்

அண்ணாமலைநகர்:

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம், கடலூர் மாவட்டம் கொத்தட்டை ஆகிய ஊர்களை அடுத்து சிதம்பரம் தாலுகா, அண்ணாமலை நகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 122-வது திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் மகாபாரதம் படிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வான வேடிக்கைகளுடன் அரவான் ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று மாலை முக்கிய உற்சவமான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாலை 5 மணியளவில் அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் தேரில் அரவான் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரர் கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் அண்ணாமலைநகர் பகுதியில் இருந்து மேள, தாளம் முழங்க பக்தர்கள் பிரம்மாண்டமான மாலைகளை எடுத்து வந்து அரவானுக்கு அணிவித்து தரிசனம்செய்தனர். விழாவில் அண்ணாமலைநகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூத்தாண்டவர் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story